ஒகேனக்கல்லில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்

விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

Update: 2022-04-03 18:42 GMT
பென்னாகரம்:
விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா தலம்
கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து செல்கிறார்கள். இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ், காவிரி ஆறு உள்ளிட்ட இடங்களில் குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
கூட்டம் அலைமோதியது
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. வெயில் கொளுத்தியதால் இளநீர், குளிர்பானம், தர்பூசணி விற்பனை படுஜோராக நடந்தது. 
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசார் ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

மேலும் செய்திகள்