கொண்டகரஅள்ளி முக்குளம் பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் விண்ணப்பிக்க சிறப்பு முகாம்
கொண்டகரஅள்ளி, முக்குளம் பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொ.மல்லாபுரம் பேரூராட்சி அருகில் உள்ள கொண்டகரஅள்ளி, காரிமங்கலம் அருகே உள்ள முக்குளம் ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளதால் தர்மபுரி மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட திட்ட பகுதி அருகில் வசித்து வரும் சொந்த வீடு இல்லாத பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின்படி வீடுகளை பெற விண்ணப்பிக்க சிறப்பு முகாம் கொண்டகரஅள்ளி திட்டப் பகுதியில் வருகிற 12- ந்தேதி நடக்கிறது. இதில் பயன்பெற தகுதியுடைய ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பயனாளி பங்கீட்டு தொகையாக ரூ.1.52 லட்சம் செலுத்த வேண்டும். இதேபோல் முக்குளம் திட்ட பகுதியில் வீடுகளை பெற விண்ணப்பிக்க சிறப்பு முகாம் வருகிற 13-ந்தேதி நடக்கிறது. இதில் பயன்பெற தகுதியுடைய அனைத்து வகுப்பினரும் விண்ணப்பிக்கலாம். பயனாளி பங்கீட்டு தொகையாக ரூ.1.80 லட்சம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.