ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நொச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஊணாம்பாளையம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த 10 நாட்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராமமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சாலையில் கட்டையை போட்டு வைத்தனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்குமரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகாந்தன், குட்டியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.