மிளகாய் விளைச்சல் அமோகம்

மிளகாய் விளைச்சல் அமோகமாக இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

Update: 2022-04-03 17:47 GMT
முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் பகுதியில் மிளகாய் விளைச்சல் அமோகமாக இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
மறுசாகுபடி
முதுகுளத்தூர் அருகே உள்ள தேரிருவேலி, பூசேரி, கடம் போடை, தாழியரேந்தல், மட்டியரேந்தல், வளநாடு, செங்கப் படை, ஆதம் கொத்தங்குடி உள்ளிட்ட100-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் மிளகாய், வெங்காயம், மல்லி ஆகியவை அதிக அளவில் பயிரிடுவது வழக்கம்.
 இந்த ஆண்டு விவசாயிகள் ஜனவரி மாதத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிளகாய் செடிகளை சாகுபடி செய்து இருந்தனர். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக விளை நிலத்தில் நீர் சூழ்ந்ததால் 2 முறை பயிர்களை அழித்து விட்டு மீண்டும் மறு சாகுபடி செய்திருந்தனர். 
இந்தநிலையில் கடந்த ஒரு மாத காலமாக மிளகாய் செடியில் இருந்து மிளகாய் பழங்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங் களில் ஏக்கருக்கு 5 குவிண்டால் வரை மிளகாய் வத்தல் மகசூல் கிடைத்தது. இந்த ஆண்டு நிலத்தில் தேங்கிய மழைநீரால் மிளகாய் செடிகள் போதிய வளர்ச்சி இல்லாமல் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக ஒரு ஏக்கருக்கு ஒரு குவிண்டால் மிளகாய் மட்டுமே கிடைக்கிறது. 
கவலை
கூலி ஆட்களுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை சம்பளம் கொடுத்து மிளகாய் பழங்களைப் பறித்து அவற்றை வெயிலில் வத்தலாக உலர்த்தி அவற்றை விற்பனைக்கு கொண்டு செல்லும்போது சந்தையில் உரிய விலை இல்லை எனவும் கடந்த வருடம் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையான ஒரு குவிண்டால் (100 கிலோ) தற்போது 17 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். 
ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் ஒரு ஏக்கரில் கிடைக்கும் ஒரு குவிண்டால் வத்தல் 17 ஆயிரம் ரூபாய்க்கு விலை போவது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்