‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-04-03 16:16 GMT
மழைநீர் கால்வாய் சீரமைக்கப்பட வேண்டும்

சென்னை சூளைமேடு வன்னியர் தெருவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மழைநீர் கால்வாயை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டு, சீரமைக்காமல் அப்படியே நிலுவையில் வைத்துள்ளனர். சாலைவாசிகள் அதிகம் கடந்து செல்லும் பகுதியில் ஆபத்தான நிலையில் இருக்கும் கால்வாய் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது கவலையளிக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கால்வாயை சீரமைத்து தர வேண்டும்.

- டி.ஈஸ்வரன், சூளைமேடு.



இடையூறு அகற்றப்படுமா?

சென்னை அடையாறு காந்தி நகர் முதல் பிரதான சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தின் அருகே, சாலை போடும் பணிகள் முடிந்து 2 மாதங் கள் ஆன பிறகும் சாலை போட பயன்படுத்தப்பட்ட தார் டப்பாக்களை அப்படியே சாலையிலேயே விட்டுவிட்டனர். இதனால் பஸ் ஏறும் பயணிகளுக்கு இது இடையூறாக உள்ளது. அதிகாரிகள் கவனித்து இடையூறுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- கல்யாணிதாசன், அடையாறு.

சுவரொட்டிகளால் நிரம்பிய பெயர் பலகை

சென்னை பழைய திருமங்கலம் சாலை நாதமுனி திரையரங்கம் சந்திப்பு பகுதியில் உள்ள தெரு பெயர் பலகை முழுவதும் சுவரொட்டிகளால் நிரம்பியுள்ளது. தெருவின் அடையாளமே பெயர் பலகை தான் என்பது பெரும்பாலானோர் உணராமல் இருப்பது ஏன்? பெயர் பலகையின் உதவியால் தான், புதிதாக ஒரு பகுதியை தேடி அலைபவர் அவர் தேடும் பகுதிக்கு எளிதாக சென்றடைய முடிகிறது. எனவே தெரு பெயர் பலகையில் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடாதவாறு இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

- ஆலமுத்து, சமூக ஆர்வலர்.



உடைந்த தண்ணீர் குழாய்

சென்னை நோலாம்பூர் மேம்பாலத்தின் கீழே தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. நீர் தேவை அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில், இதுபோன்று வீணாகி வெளியேறும் நீரால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மேலும், நீர் வீணாகாமல் இருக்க உடைந்த குழாயை சரி செய்வார்களா?

- சாலைவாசிகள்.

சேதமடைந்த மின்கம்பம்

சென்னை திருவொற்றியூர் சிவசக்தி நகர் 5-வது தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. மேலும் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கம்பிகள் வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் உள்ளது. நீண்ட நாட்களாக இந்த நிலை தொடர்கிறது. யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. பழுதடைந்த மின்கம்பத்தை மின்வாரியம் சீரமைத்து தர வேண்டும்.

- சக்தி, திருவொற்றியூர்.

ஆபத்தை விளைவிக்கும் வடிகால்வாய்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்.எஸ்.நாயுடு தெருவில் உள்ள வடிகால்வாய் சாலையில் இருந்து 1 அடிக்கும் மேல் இருக்குமாறு அமைத்துள்ளனர். இதனால், அவ்வழியே நடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தடுக்கி விழும் அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு வடிகால்வாயை சரி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- முகுந்தன், வண்ணாரப்பேட்டை.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே ஈ.வெ.ரா நாகம்மை நகர் 2-வது குறுக்கு தெருவில் மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மாநகராட்சி மின் ஊழியர் பழுதான விளக்கை மாற்ற கம்பத்தில் ஏறும்போது கீழே விழுந்து காயம் ஏற்பட்ட சம்பவம் கூட நடந்துள்ளது. எனவே, பெரும் அசம்பாவிதம் ஏதேனும் நேரிடும் முன்பாக மின்வாரிய அதிகாரிகள் இந்த மோசமான மின் கம்பத்தை மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சு.சங்கர், நாகம்மை நகர்.



நீண்ட நாள் கோரிக்கை

காஞ்சீபுரம் குன்றத்தூர் வெங்கடாபுரம் நல்லீஸ்வரர் நகர் விரிவாக்கப் பகுதியில் நீண்ட நாட்களாக தெருவிளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் வேலை முடிந்து வீடு திரும்புவோர், வேலைக்கு செல்வோர் என பெரும்பாலானோர் தெருக்களில் போதிய வெளிச்சமில்லாமல் சிரமப்படுகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைத்திட ஆவன செய்ய வேண்டும்.

- மணி, குன்றத்தூர்.

நிரந்தர தீர்வு கிடைக்க தாமதம் ஏன்?

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் திருமணி இந்திரா நகர் பகுதியில் தினமும் மாலை, இரவு நேரங்களில் மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது. இரவு நேரங்களில் குழந்தைகளை வைத்துக் கொண்டு மின்சாரம் இல்லாத நேரங்களில் மிகவும் அவதிப்பட வேண்டியுள்ளது. வீட்டுப்பாடம் படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும் இது பெரும் இடையூறாக அமைகின்றது. மின்வாரியத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து, இரவு நேர மின்தடைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும்.

- வெங்கடேசன், இந்திரா நகர்.

சாலை வசதி தேவை

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு மாருதி நகர் பகுதியில் போதுமான சாலை வசதி இல்லை. மண் சாலை மட்டுமே இருந்தாலும், அதுவும் குண்டும் குழியுமாக இருக்கிறது. இரவு நேரங்களில் இந்த சாலையில் வாகனம் ஓட்டி வருவது பெரும் சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று சாலை வசதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

- பொதுமக்கள், வேப்பம்பட்டு.





மேலும் செய்திகள்