சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி கொரோனா நிவாரணம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்

சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி கொரோனா நிவாரணம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-03 16:05 GMT

கொரோனா உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணை தொகை வழங்குவதற்கு சிறப்பு குழு www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெறப்படும் மனுக்களை பரிசீலித்து வருகிறது. இதுவரை 74 ஆயிரத்து 97 மனுக்கள் பெறப்பட்டு, 55 ஆயிரத்து 390 பேருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 13 ஆயிரத்து 204 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதிக்கு முன்னர் ஏற்பட்ட இறப்புக்களுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிவாரணம் பெறலாம்

கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்கவேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்லாம்.

இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவின் ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும். எனவே கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் மேற்கண்ட சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி உரிய காலத்தில் மனுக்களை சமர்ப்பித்து நிவாரணம் பெற்று பயன் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்