கொடைக்கானல் அருகே குட்டியுடன் வலம் வரும் காட்டு யானைகள்; மலைக்கிராம மக்கள் அச்சம்

கொடைக்கானல் அருகே குட்டியுடன் வலம் வரும் காட்டு யானைகளால் மலைக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2022-04-03 15:48 GMT
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், கணேசபுரம், அஞ்சுவீடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதிகளில் மா, பலா, வாழை, காப்பி, அவரை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தநிலையில் பேத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக 2 காட்டு யானைகள் குட்டியுடன் வலம் வருகின்றன. அவை தோட்டங்களில் புகுந்து விவசாய பயிர்களையும், நிலங்களையும் சேதப்படுத்தி வருவதுடன், அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களை அச்சுறுத்தியும் வருகின்றன. இதனால் தோட்டங்களுக்கு விவசாயிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் வராமல் தடுக்க அகழிகளை அமைக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்கு காட்டு யானைகள் வராமல் தடுப்பதற்காக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். பேத்துப்பாறை பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அச்சப்படாமல் இருக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்