கால்நடைகளை கொல்வதற்கு முன்பு மயக்க மருந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்; பெங்களூரு மாநகராட்சிக்கு, அரசு உத்தரவு

பெங்களூருவில் இறைச்சி கூடங்களில் கால்நடைகளை பலியிடும் முன்பு அவற்றுக்கு மயக்க மருந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சிக்கு மாநில அரசின் கால்நடைத்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-04-03 15:47 GMT
பெங்களூரு:

ஹலால் முறையில்...

  இஸ்லாமியர்கள் நடத்தும் இறைச்சி கூடங்களில் ஹலால் முறையில் ஆடு, கோழிகள் உள்பட கால்நடைகள் பலியிடப்படுகின்றன. அதனால் சில இந்து அமைப்புகள், முஸ்லிம் இறைச்சி கூடங்களில் இந்துக்கள் இறைச்சி வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

  இதுதொடர்பாக அந்த அமைப்புகள் மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ‘ஹலால்' இறைச்சி விவகாரம் ஏற்பட்டு வரும் நிலையில் கால்நடைகளை கொல்வதற்கு முன்பு மயக்க மருந்து வழங்க வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசின் கால்நடைத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கடைகளுக்கு உரிமம்

  பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள், இறைச்சி கூடங்களில் கால்நடைகளை பலியிடும்போது, அவற்றுக்கு மயக்க மருந்து வழங்க வேண்டும். இந்த விதிமுறை சரியாக பின்பற்றப்படுவது இல்லை என்று பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. அதனால் கால்நடைகளை பலியிடும்போது அவை உணர்வு இல்லாத நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  இதை உறுதி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் இறைச்சி கூடங்களில் ஆய்வு செய்ய வேண்டும். இறைச்சி கூடங்கள் மற்றும் கோழி மாமிச கடைகளுக்கு உரிமம் வழங்கும்போது, இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இதுபற்றி எடுத்த நடவடிக்கை குறித்து மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  இத்தகைய உத்தரவு வழக்கமாக பிறப்பிக்கப்படுகிறது என்றாலும், தற்போது ஹலால் இறைச்சி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்