ரெயிலில் மதுபானம் கடத்திய வாலிபர் கைது
ரெயிலில் மதுபானம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால், தனிபிரிவு ஏட்டு ராஜேஷ் குமார் மற்றும் போலீசார் நேற்று நடைமேடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தது.
இதையடுத்து ரெயில் பெட்டிகளில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது எஸ்-5 பெட்டியில் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர், விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 26) என்பதும், பெங்களூவில் இருந்து விருதுநகருக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.