ஆட்களை ஏற்றி சென்ற மினி சரக்கு வேன் உரிமையாளருக்கு அபராதம்
ஆட்களை ஏற்றி சென்ற மினி சரக்கு வேன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வாணியம்பாடி
ஜவ்வாதுமலையில் உள்ள சேம்பரை பகுதியில் விபத்து ஏற்பட்டு 11 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் எதிரொலியால் சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் தலைமையிலான போலீசார், வாணியம்பாடி - ஆம்பூர் சாலையில் உள்ள வளையாம்பட்டு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 10-க்கும் மேற்பட்ட ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆம்பூரை நோக்கி சென்ற ஒரு மினி சரக்கு வேனை தடுத்து நிறுத்தி, அதன் உரிமையாளருக்கு ரூ.3,700 அபராதம் விதித்தனர். டிரைவருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.