கஞ்சா விற்பனை ஒரு வாரத்துக்குள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

வேலூர் மாவட்டத்தில் ஒருவாரத்துக்குள் கஞ்சா விற்பனை முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.

Update: 2022-04-03 13:48 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் ஒருவாரத்துக்குள் கஞ்சா விற்பனை முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.

மோப்பநாய் பிரிவு

வேலூர் மாவட்ட காவல்துறையில் உள்ள மோப்பநாய் பிரிவு வேலூர் வசந்தபுரத்தில் இயங்கி வருகிறது. இங்கு குற்ற வழக்குகள், போதைப்பொருட்களை கண்டறிய சிம்பாவும், வெடிகுண்டுகளை கண்டறிதல், வி.வி.ஐ.பி., மற்றும் வி.ஐ.பி. பாதுகாப்பு பிரிவில் லூசி, அக்னி ஆகிய நாய்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. தற்போது 4-வதாக குற்றம் மற்றும் போதைப்பொருட்களை துப்பறிய சாரா என்ற புதிய நாய் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதனை மோப்பநாய் பிரிவில் சேர்த்து அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மோப்பநாய் பிரிவு அலுவலகத்தில்  நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கி, சாராவை மோப்பநாய் பிரிவில் சேர்த்து வைத்தார். தொடர்ந்து மோப்பநாய்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கும் போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஞ்சா விற்பனை கட்டுப்படுத்தப்படும்

மோப்பநாய் சிம்பா கடந்த சில நாட்களில் ஆந்திராவில் இருந்து வாகனங்களில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை கண்டுபிடித்துள்ளது. அதேபோன்று லூசி, அக்னி ஆகிய மோப்பநாய்கள் 5 வி.வி.ஐ.பி. நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளது. தற்போது சிம்பா காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் கஞ்சா கடத்தலை கண்டுபிடிக்க அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. மோப்பநாய்களுக்கு ஒரு நாளைக்கு அரைலிட்டர் பால், 300 கிராம் இறைச்சி, 100 கிராம் காய்கறிகள், 200 கிராம் சாதம், 200 கிராம் பிஸ்கெட் ஆகியவை வழங்கப்படுகிறது.

தற்போது புதிய வரவாக :சாரா' என்கிற 6 மாத நாய் மோப்பநாய் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு 6 மாதம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் குற்ற நுகர்வுகளை கண்டறிய சென்னை அல்லது கோவைக்கு கொண்டு சென்று பயிற்சி வழங்கப்படும். ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு அதிகளவு கஞ்சா கடத்தப்படுகிறது. இதனை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் ஒருவாரத்துக்குள் கஞ்சா விற்பனை முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு மற்றும் சோதனை நடைபெற்று வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்