கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு வர்த்தகம்
கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
எடப்பாடி,
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் நேற்று வாரச்சந்தை கூடியது. கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவதாலும், யுகாதி பண்டிகையையொட்டியும் நேற்று சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மொத்தம் 7 ஆயிரம் ஆடுகள், 3 ஆயிரம் கோழிகள் மற்றும் சேவல் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.4 ஆயிரத்து 700 முதல் ரூ.6 ஆயிரத்து 300 வரையும், 20 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.9 ஆயிரத்து 600 முதல் ரூ.12 ஆயிரம் வரையும், வளர்ப்பு குட்டி ஆடுகள் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் சேவல் தரத்திற்கு ஏற்ப ரூ.1,000 முதல் ரூ.4 ஆயிரத்து 300 வரை விற்பனையானது. கோழிகள் ரூ.100 முதல் ரூ.1,000 வரையும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகள் 110 டன் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது. 60 கிலோ எடையுள்ள சின்ன மற்றும் பெரிய வெங்காயம் ரூ.1,200 முதல் ரூ.2 ஆயிரத்து 700 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று மட்டும் சந்தையில் ரூ.6 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.