சேலத்தில் பரபரப்பு திருட்டு வழக்கில் கைதான சிறுவன் தப்பி ஓட்டம்
திருட்டு வழக்கில் கைதான சிறுவன், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
திருட்டு வழக்கில் கைது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனை கடந்த மாதம் 23-ந் தேதி திருட்டு வழக்கில் நாமக்கல் போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவனை போலீசார் சேலம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த நிலையில் அந்த சிறுவன் கடந்த 25-ந் தேதி அங்கிருந்து தப்பி சென்றான்.
இதையடுத்து கூர்நோக்கு இல்ல பணியாளர்கள் திருச்செங்கோட்டில் உள்ள அவனுடைய வீட்டுக்கு சென்று சிறுவனை பிடித்து மீண்டும் கூர்நோக்கு இல்லத்துக்கு அழைத்து வந்தனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாஜிஸ்திரேட்டு கலைவாணி அங்கு சென்று குறைகளை கேட்டு விசாரித்து வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் அவர் அங்கு சென்று சிறுவர்களிடம் விசாரித்தார்.
தப்பி ஓட்டம்
அப்போது திருட்டு வழக்கில் கைதான அந்த சிறுவனின் கன்னம் வீங்கி இருந்தது. இதைப் பார்த்த மாஜிஸ்திரேட்டு அவனிடம் இதுகுறித்து கேட்டறிந்தார். அப்போது அவன் கூர்நோக்கு இல்லத்தில் உள்ளவர்கள் தன்னை அடித்ததாக கூறினான். இதையடுத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் அந்த சிறுவன் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த சிறுவன் இரவில் யாருக்கும் தெரியாமல் நைசாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அவனை ஆஸ்பத்திரி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் ராஜ்குமார், சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிறுவன் திருச்செங்கோட்டில் உள்ள தனது வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்பதால் அவனை தேடி போலீசார் அங்கு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கண்காணிப்பாளர் மீது வழக்கு
இதற்கிடையில் சிறுவனை அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அஸ்தம்பட்டி போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு கலைவாணி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் டேவிட் ராஜா மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.