செங்குணம் ஏரி கரைப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
செங்குணம் ஏரி கரைப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகளும், 33 அணைக்கட்டுகளும் உள்ளன. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளும் நிரம்பி உபரிநீர் வழிந்தோடியது. ஏரிகளின் நீர்பரப்பு பகுதிகளில் பொதுமக்களால் 74 எக்டேர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் செய்யப்பட்ட நிலங்களில் தண்ணீர் தேங்கியதால், அங்கு விவசாயம் செய்வதை ஆக்கிரமிப்பாளர்கள் நிறுத்தி விட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு முழுவதுமாக அகற்றப்பட்டது.
மேலும் நீர் ஆதாரத்தை அதிகப்படுத்தவும், ஏரிகள் மற்றும் நீர்வழித்தடங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகவும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, செங்குணம் கிராமத்தில் ஏரி கரைப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி பொறியாளர் தங்கையன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் ஏரிக்கரை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 வீடுகள் மற்றும் அனைத்து ஆக்கிரமிப்புகளும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.