சரக்கு வாகனங்களில் தொழிலாளர்கள் ஆபத்தான பயணம்
சரக்கு வாகனங்களில் தொழிலாளர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.
தா.பழூர்:
விவசாய பணிகளுக்கு...
தா.பழூர் சுற்றுவட்டாரம் முழுவதும் விவசாயத்தை நம்பி வாழும் பகுதிகளாக உள்ளது. இங்கு விதை விதைப்பது முதல் அறுவடை செய்வது வரை விவசாய பணிகளுக்கு கூலித் தொழிலாளர்களின் தேவை உள்ளது. ஆனால் அந்தந்த ஊரிலேயே விவசாய பணிக்கு கூலித்தொழிலாளர்கள் கிடைக்கும் சூழ்நிலை குறைந்து விட்டது.
எனவே கூலித் தொழிலாளர்களை ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு அழைத்துச் சென்று விவசாய பணிகளை மேற்கொள்ளும் நிலை விவசாயிகளுக்கு உள்ளது. ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வசதிகள் இல்லாத நிலையில், சரக்கு வாகனங்களில் கூலித்தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் நிலை உள்ளது.
ஆபத்தான பயணம்
சில இடங்களில் சரக்கு வேன்களில் கும்பல், கும்பலாக ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்வது போல் கூலித் தொழிலாளர்களை ஏற்றிச்செல்வது சமீப காலங்களில் அதிகரித்து உள்ளது. இதில் பெண் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். கடந்த காலங்களில் சரக்கு வாகனங்களில் கூலித்தொழிலாளர்களை ஏற்றிச்சென்றபோது விபத்து ஏற்பட்டு, பலர் காயமடைந்த சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் சரக்கு வாகனங்களில் பயணிகளை அழைத்துச் செல்லக்கூடாது என்று சட்ட விதிகளும் உள்ளன.
ஆனால் விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் தங்கள் விவசாய நிலங்களுக்கு வேலைக்காக கூலித்தொழிலாளர்களை சரக்கு வாகனங்களில் அழைத்துச் செல்கின்றனர். மேலும் துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்லும் உறவினர்கள் சரக்கு வேன்கள், விவசாய பயன்பாட்டிற்கு உள்ள டிராக்டர்கள் ஆகியவற்றில் பயணம் செய்வதும் தற்போது வாடிக்கையாகி வருகிறது.
கோரிக்கை
இதுபோன்று தொடர்ந்து நடைபெறுவதால் பெரிய அளவிலான விபத்துகள் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே விபத்துகள் நடந்து அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி, சரக்கு வாகனங்களில் கூலித் தொழிலாளர்களை அழைத்துச் செல்வதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.