சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
விருதுநகர்,
சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சொத்து வரி உயர்வு
தமிழக அரசு பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி உயர்வு செய்யப்படுவதாகவும் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் இந்த வரி உயர்வு அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. இதற்கு 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையையும், மத்திய அரசின் பல்வேறு திட்ட செயல்பாட்டிற்கும் இது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் குறைந்துள்ள நிலையில் செலவினங்கள் அதிகரித்து உள்ளதால் பெரும் சிரமத்தில் உள்ளதாகவும், அதனால் சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
பொருந்தா காலம்
இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
தமிழக அரசு சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசின் பரிந்துரையை காரணம் காட்டி உள்ளது. மேலும் குறிப்பிட்ட கால அவகாச இடைவெளியில் சொத்து வரி உயர்வை அமல்படுத்துவது என்பது தவிர்க்க முடியாது தான்.
ஆனால் தற்போதைய நிலையில் சொத்து வரி உயர்வு செய்துள்ளது பொருந்தா காலம் என்பதே பொது மக்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த மாத இறுதியில் தான் மத்திய அரசு முழுமையாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.
ஏற்புடையது அல்ல
கொரோனா பாதிப்பு காலத்தில் தொழில்முற்றிலும் பாதிக்கப்பட்டதோடு அதனை சார்ந்துள்ள பணியாளர்கள் முதல் சாதாரண கூலித்தொழிலாளர்கள் வரை மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இன்னும் இந்த பாதிப்பில் இருந்து அனைத்து தரப்பினரும் முழுமையாக மீளாத நிலையில் தொழில் மற்றும் வணிகம் இயல்பு நிலையை அடைய தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் சொத்து வரி விதிப்பு உயர்வு என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு சொத்து வரி உயர்வுக்கு கூறியுள்ள காரணங்கள் ஏற்புடையது தான் என்றாலும் வரி உயர்வு செய்யப்பட்டுள்ள காலம்தான் ஏற்புடையதாக இல்லை. மேலும் சொத்து வரி உயர்வை பொருத்தமட்டில் ஒரே நேரத்தில் வரி விதிப்பை இரண்டு மடங்காக உயர்த்துவதும் ஏற்புடையது அல்ல. எனவே வரி விதிப்பு விகிதத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகும். எனவே உயர்வுக்கான காரணங்கள் நியாயமாக இருந்தாலும் காலம் ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.