செஷல்ஸ் தீவில் சிறையில் வாடும் 5 குமரி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை ;மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை

செஷல்ஸ் தீவில் சிறையில் வாடும் 5 குமரி மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-04-02 18:55 GMT
நாகர்கோவில், 
செஷல்ஸ் தீவில் சிறையில் வாடும் 5 குமரி மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மீனவர்கள் சிறை பிடிப்பு
குமரி மாவட்டம் தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த 5 விசைப்படகுகளில் 61 மீனவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தேங்காப்பட்டணம் மற்றும் கொச்சியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தாக செஷல்ஸ் நாட்டு படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்ைக விடுத்ததன் அடிப்படையில் மத்திய மாநில அரசுகளும் இந்திய தூதரகமும் நடவடிக்கை எடுத்து கடந்த மாதம் 22-ந் தேதி 5 பேரை தவிர (படகுகளின் கேப்டன்கள்) 56 மீனவர்களும் அபராதமின்றி விடுதலை செய்யப்பட்டனர். 
மீதமுள்ள 5 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.  
அரசுக்கு கோரிக்கை
இந்த நிலையில் இவர்களின் உறவினர்களும், சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணியும் சேர்ந்து பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உள்துறை மந்திரி, வெளிவிவகாரத்துறை மந்திரி ஆகியோருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
செஷல்ஸ் தீவில் கடந்த பல நாட்களாக 5 மீனவர்கள் சிறையில் வாடி வருகிறார்கள். இதனால், இவர்களது வயதான நோய்வாய்ப்பட்ட பெற்றோர், குழந்தைகள் உள்பட குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். இந்த 5 மீனவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் அரசுகளின் கையில் உள்ளது. எனவே 5 மீனவர்களையும் படகுகளையும் மீட்க இந்திய அரசு, செஷல்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்