திருச்செங்கோடு அருகே மருந்து கடை சீல்
திருச்செங்கோடு அருகே மருந்து கடை சீல்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே ராமாபுரம் கொசவம்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் மனைவி கர்ப்பிணியான ரம்யா என்பவர் உடல்நலக்குறைவால் இறந்ததாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்குக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குடும்ப நலத்துறை துணை இயக்குனர் மருத்துவர் வளர்மதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டார். குழு விசாரணையில் ரம்யா அதே பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டதாக தெரியவந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மருந்து கடையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்ய சென்றபோது கடை பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து மருந்து கடையின் முன் வைக்கப்பட்டிருந்த மருந்து பெட்டிகளில் பயன்படுத்திய காலி ஊசிகள், மருந்துகளை ஆய்வு செய்தனர். பின்னர் நீண்டநேரமாகியும் மருந்து கடை உரிமையாளர் வராததையடுத்து மருந்து கடையை பூட்டி சீல் வைத்தனர்.
இதையடுத்து மருந்து கடை உரிமையாளர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்ககோரி மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் மல்லசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.