மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் 5 இடங்களில் நடந்தது.
விழுப்புரம்,
பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், இதன் விலை உயர்வை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சித்ரா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, இடைக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், கலியமூர்த்தி, சேகர், கிளை செயலாளர்கள் பாலமுருகன், ஜெயா, உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது சமையல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல்-டீசல் கேன்கள் ஆகியவற்றுக்கு மாலை அணிவித்தவாறு கண்டன கோஷம் எழுப்பினர்.
இதேபோல் கண்டமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி தலைமையிலும், கோட்டக்குப்பத்தில் இடைக்குழு உறுப்பினர் முகமதுஅனாஸ் தலைமையிலும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் வானூர் வட்ட செயலாளர் முருகன் தலைமையிலும், கஞ்சனூரில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.