‘தினத்தந்தி’ புகார் ெபட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலைகள்
ஆனைமலை, சேத்துமடை, அண்ணா நகர் ஆகிய பகுதியில் உள்ள சாலைகள் ஆங்காங்கே பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அனைத்து தரப்பினரின் நலன் கருதி அந்த சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிச்சாமி, ஆனைமலை.
குப்பைக்கு தீ வைப்பதால் அவதி
நெகமத்தில் இருந்து வடசித்தூர் செல்லும் சாலையோரத்தில் செட்டிபுதூர் அருகே பழைய துணிகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுகின்றன. அந்த குப்பைக்கு சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி கடும் புகைமூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக அருகில் வசிப்பவர்கள், அந்த வழியாக செல்பவர்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சிைனகளால் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.
செந்தில்குமார், செட்டிபுதூர்.
விஷ ஜந்துக்களின் கூடாரம்
கணபதி ஜானகி நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு மாநகராட்சியின் ரிசர்வ் சைட் உள்ளது. இந்த இடத்தில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை சாய்ந்து விழும் வகையில் இப்போதோ, எப்போதோ என்ற நிலையில் கிடக்கிறது. மேலும் அங்கு செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி விட்டது. இதன் காரணமாக அதனருகில் வசித்து வருபவர்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே அங்கு அந்த இடத்தை முறையாக பராமரித்து பயனுள்ளதாக மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.
முத்து, கணபதி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை கவுண்டம்பாளையம் அருகே நல்லாம்பாளையம் சாலை தர்சனா கார்டன் முதல் ஸ்ரீ சூரியா கார்டன் வரை சுமார் 200 மீட்டருக்கு மேல் பல மாதங்களாக சாலையோரம் கொட்டப்பட்டு உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அது சாலையா? அல்லது குப்பைமேடா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. மேலும் வெள்ளலூர் குப்பை கிடங்கை இங்கு மாற்றிவிட்டனரா? என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே அந்த குப்பை மேட்டை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜூ, கோவை.
பஞ்சராகும் பஸ்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இயக்கப்படுகிறது. அவை முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பயணிகளுடன் செல்லும் பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் பஞ்சராகி நின்று விடுகின்றன. இதன் காரணமாக அவர்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிந்து, கூடலூர்.
வாகனங்களை நிறுத்த இடம் வேண்டும்
கூடலூர் நகரில் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை உள்ளதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜன், கூடலூர்.
போக்குவரத்து நெரிசல்
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலை செல்கிறது. இந்த சர்வீஸ் சாலையோரத்தில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுவதை காண முடிகிறது. மேலும் கனரக வாகனங்களை கூட நடுரோட்டில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பிற வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் விபத்துகளும் அதிகரிக்கிறது. எனவே அங்கு வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசோக்குமார், கிணத்துக்கடவு.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட முக்கோணம் பகுதியில், சாலையை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டு உள்ளன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே போக்குவரத்தக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பாரபட்சமின்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், ஆனைமலை.
கால்நடைகள் தொல்லை
கோத்தகிரி தாசில்தார் அலுவலகம், கோர்ட்டு நுழைவு வாயில் அருகில் காய்கறி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்த கழிவுகளை தின்பதற்காக ஏராளமான கால்நடைகள் அங்கு சுற்றித்திரிகின்றன. அவை சாலையின் குறுக்கே நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே அங்கு காய்கறி கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், கோத்தகிரி.