விவசாயிகளிடம் இருந்து 600 டன் நெல் கொள்முதல்

ஆனைமலையில் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளிடம் இருந்து 600 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-04-02 16:48 GMT
பொள்ளாச்சி

ஆனைமலையில் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளிடம் இருந்து 600 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

நெல் அறுவடை

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகள் பயன்பெறுகின்றன. இதற்கிடையில் பழைய ஆயக்கட்டில் அதிகமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் 2-ம் போக நெல் சாகுபடியில் கோ 51, ஏ.எஸ்.டி., ஏ.எல்.ஆர்.டி. உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர். இந்த நிலையில் நெல் அறுவடை பணிக்கு விவசாயிகள் தயார் நிலைக்கு வந்தது.

இதற்கிடையில் விவசாயிகள் ஆனைமலையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஒரு மாதத்திற்கு முன் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, பொள்ளாச்சியில் உள்ள நுகர்பொருள் வாணிக கழகத்திற்கு நெல் மூட்டைகள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொள்முதல் நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

600 டன் கொள்முதல்

நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ஆனைமலை, கோட்டூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2067, பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2015-க்கும் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனைமலையில் இன்னும் 50 சதவீதம் நெல் அறுவடை செய்ய வேண்டிய உள்ளது.

தற்போது வரை சன்ன ரகம் 7,200 மூட்டைகளும், பொது ரகம் 9 ஆயிரம் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. மொத்தம் இதுவரைக்கும் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து 600 டன் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள உலர்கலன்களை விவசாயிகள் இலவசமாக பயன்படுத்தி நெல்லை உலர வைத்து கொள்முதல் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்