ஒரே கிராமத்தில் 10 மாணவிகளுக்கு திருமணமானதை அறிந்து அதிகாரி அதிர்ச்சி
இடைநின்ற 76 மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைக்க சென்றபோது ஒரே கிராமத்தில் 10 மாணவிகளுக்கு திருமணமானதை அறிந்து அதிகாரி அதிர்ச்சி அடைந்தார்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 66 மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்று விட்டனர். இதையறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் விதமாக நடவடிக்கையில் இறங்கினார். அதன்படி, தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி கிராமத்திற்கு சென்ற அவர் அக்கிராமத்தில் இருந்து இடைநின்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை சந்தித்து பேசினார்.
அப்போது குடும்ப சூழ்நிலை காரணமாக மாணவர்கள் வேலைக்கு செல்கிறார்களா? என்பது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோரிடம் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு படிப்பு மிகவும் அவசியம். எனவே மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் என அறிவுரை வழங்கினார். இதில் 7 மாணவர்களின் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தனர்.
10 மாணவிகள்
இதையடுத்து தியாகதுருகம் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகள் யாரேனும் இடையில் நின்றுள்ளார்களா? என முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி விவரங்களை சேகரித்தார். அப்போது அந்த பள்ளியில் 10 மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்றது தெரிந்தது. இதையடுத்து அந்த மாணவிகளின் வீடுகளுக்கு அவர் சென்று விசாரித்தார். அப்போது அந்த 10 மாணவிகளுக்கும் திருமணம் முடிந்து விட்டதும், அதில் சிலர் கர்ப்பிணியாகவும், குழந்தை பெற்று தாயாக இருப்பதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து பெற்றோர்களிடம் பெண் பிள்ளைகளுக்கு கல்வி மிகவும் அவசியம், மேலும் திருமண வயதை எட்டாத குழந்தைகளுக்கு இதுபோன்று திருமணம் செய்து வைப்பது தவறு என்று அறிவுரை வழங்கினார். அப்போது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், ஒன்றியக்குழு துணைத்தலைவருமான நெடுஞ்செழியன், பேரூராட்சி துணை தலைவர் சங்கர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.