டாக்டர் அர்ச்சனா தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 250 ஆஸ்பத்திரிகள் ஒருநாள் வேலை நிறுத்தம்

டாக்டர் அர்ச்சனா தற்கொலைக்கு நீதி கேட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 250 ஆஸ்பத்திரிகள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

Update: 2022-04-02 16:45 GMT
கிருஷ்ணகிரி:
டாக்டர் தற்கொலை 
ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசவத்தின்போது பெண் இறந்துவிட்டதால் பிரசவம் பார்த்த டாக்டர் அர்ச்சனா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் மனமுடைந்த டாக்டர் அர்ச்சனா ‘அப்பாவி டாக்டர்களை துன்புறுத்தாதீர்கள்’ என உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டாக்டர் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
வேலை நிறுத்தம் 
இந்தநிலையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி நேற்று நாடு தழுவிய போராட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் 250 ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் புற நோயாளிகள் சிகிச்சையை தவிர்த்து ஆஸ்பத்திரியை பூட்டினர். மேலும் தங்களது ஆஸ்பத்திரி முன்பு அர்ச்சனா மீது தவறான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினரை கைது செய்ய வேண்டும், அர்ச்சனா குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர்களின் இந்த போராட்டத்தால் நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள்.
ஓசூர்
போராட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் ஓசூர் கிளை தலைவர் டாக்டர் பிரதீப்குமார் நேற்று ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டாக்டர் அர்ச்சனா மீது தவறாக வழக்குப்பதிவு செய்த போலீசாரை கைது செய்ய வேண்டும். தற்போது டாக்டர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. டாக்டர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்றுவது மிகவும் அவசியமாகும். மேலும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதிக இழப்பு கேட்கும் வழக்குகளில் இருந்து மருத்துவத்துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஓசூர் பகுதியில் 150 டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சங்கத்தின் துணைத்தலைவர் செந்தில், செயலாளர் பூபேஷ் கார்த்திக், பொருளாளர் நவீன்குமார் மற்றும் நிர்வாகிகள், மூத்த டாக்டர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்