நாமக்கல் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி வயலிலேயே இருப்பு வைக்கும் விவசாயிகள்
நாமக்கல் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி வயலிலேயே இருப்பு வைக்கும் விவசாயிகள்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை வயலிலேயே விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர்.
சின்ன வெங்காயம்
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை உற்பத்தி, லாரி தொழிலுக்கு அடுத்தப்படியாக விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக மோகனூர், வளையப்பட்டி, அரூர், ஆண்டாபுரம், எருமப்பட்டி, வரகூர், பவித்திரம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் டன் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
3 மாத கால பயிர் என்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தனர். குறிப்பாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சின்ன வெங்காயம் அறுவடை தொடங்கும். ஆனால் தற்போது சின்ன வெங்காயம் ஒரு கிலோவிற்கு ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளிடம் வியாபாரிகள் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை ரூ.6 முதல் ரூ.10 வரை மட்டுமே கொடுத்து வாங்குவதால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. இந்த விலை வீழ்ச்சியால் சின்ன வெங்காயம் பயிர் செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வயலில் விடுகின்றனர்
சில இடங்களில் அறுவடை செய்யும் பணிக்கான கூலிக்கு கூட சின்ன வெங்காயம் விற்பது இல்லை. எனவே விவசாயிகள் அறுவை செய்யாமலேயே வயலில் விட்டு விடுவதை பார்க்க முடிகிறது. சில விவசாயிகள் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து, தங்களது விவசாய நிலத்திலேயே பட்டறை அமைத்து இருப்பு வைத்து வருகின்றனர்.
ஏக்கருக்கு ரூ.1 லட்சம் செலவு
இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:- ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்து சின்ன வெங்காயம் சாகுபடி செய்தோம் ஆனால் உரிய விலை கிடைக்கவில்லை. அதனால் தான் வயலிலேயே இருப்பு வைத்து உள்ளோம். வருகிற மே மாதம் விலை உயரும் என நம்புகிறோம். தற்போது ரூ.300 கூலி கொடுத்தாலும் வேலைக்கு ஆட்கள் வருவது இல்லை. ஒரு கிலோவிற்கு ரூ.30-க்கு மேல் வியாபாரிகள் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்தால் மட்டுமே உரிய விலை கிடைக்கும். மேலும் அரசு வெங்காயத்திற்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடம் இருந்து வாங்கி ஏற்றுமதி செய்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.