மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் இருந்து 11-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் இருந்து வருகிற 11-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-04-02 13:47 GMT
ஆண்டிப்பட்டி:
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் இருந்து வருகிற 11-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணை 5 முறை முழு கொள்ளளவை எட்டியது. மேலும் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் கடந்த 9 மாதங்களாக 69 அடியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதுவும் அணையில் போதுமான நீர்இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும். அணையில் நீர்இருப்பு இல்லாத நேரத்தில் வைகை ஆற்றில் பள்ளம் தோண்டி அதில் தண்ணீரை நிரப்பி, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நடத்தப்படும்.
சித்திரை திருவிழா
இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா, பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மதுரையில் வருகிற 5-ந்தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 16-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.
இதையொட்டி வைகை அணையில் இருந்து வருகிற 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 6 நாட்கள் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
தண்ணீர் திறப்பு

வைகை அணையில் போதுமான நீர்இருப்பு உள்ளதால் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 11-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், ஆற்றில் தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் இரவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை மொத்தம் 250 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் ஆரம்பத்தில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அளவு குறைக்கப்படும். மேலும் தண்ணீர் திறப்பு குறித்து அரசின் அனுமதி கேட்டு, தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்