கம்பத்தில் கள்ளநோட்டு அச்சடித்தது ஏன்? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

கம்பத்தில் கள்ளநோட்டு அச்சடித்தது ஏன்? என கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2022-04-02 13:03 GMT

கம்பம்:

கள்ளநோட்டுகள் பறிமுதல்
தேனி மாவட்டம் கம்பம் சுக்காங்கல்பட்டி தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 33). இவர் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக கம்பம் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தி அங்கிருந்து ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50, ரூ.10 என மொத்தம் ரூ.87 ஆயிரத்து 810 மதிப்புள்ள கள்ளநோட்டுகள் மற்றும் 2 கலர் பிரிண்டர்களை பறிமுதல் செய்தனர். 
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று குணசேகரனை கைது செய்து விசாரித்தனர். 
வாக்குமூலம்
அப்போது அவர் போலீசில் அளித்த பரபரப்பான வாக்குமூலம் விவரம் வருமாறு:-
கம்பம் அருகேயுள்ள சாமாண்டிபுரம் எனது சொந்த ஊராகும். தற்போது மனைவி மற்றும் குழந்தையுடன் கம்பம் சுக்காங்கல்பட்டி தெருவில் வசித்து வருகிறேன். எனக்கு கம்ப்யூட்டர் டிசைனிங் வேலை தெரியும். இதனால் கம்பத்தில் உள்ள ஒரு அச்சகத்தில் கம்ப்யூட்டர் டிசைனராக வேலை செய்து வந்தேன். இந்தநிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்தேன். 
பின்னர் சொந்தமாக ஜெராக்ஸ் கடை வைப்பதற்காக கலர் பிரிண்டர், கட்டிங் மெசின், பேப்பர் உள்ளிட்டவற்றை விலைக்கு வாங்கினேன். ஆனால் கடை வைப்பதற்கு வாடகை அதிகம் கேட்டனர். இதனால் கடை அமைக்கும் திட்டத்தை கைவிட்டேன். எனினும் குடும்ப பொருளாதார பிரச்சினையை என்னால் சமாளிக்க முடியவில்லை. இதனால், நான் வாங்கி வைத்திருந்த கலர் பிரிண்டரில் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான காய்கறி மார்க்கெட், இறைச்சிகடைகள், மளிகை கடைகளில் புழக்கத்தில் விட்டேன். இதை யாரும் சந்தேகப்படவில்லை. இதனால் அன்றாட தேவைக்கு மட்டும் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டுவந்தேன். இந்தநிலையில் போலீசார் சோதனையில் நான் கையும் களவுமாக சிக்கி கொண்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கம்பத்தில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்து உள்ளது.

மேலும் செய்திகள்