திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை பணிக்கு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு 117 வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-02 00:26 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் மேற்கு பகுதியில் உள்ள கார்க்கில் நகர், ராஜாஜி நகர் உள்பட சுமார் 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கு பகுதிக்கு செல்ல அண்ணாமலை நகர் ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றனர். திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகிலேயே அண்ணாமலை ரெயில்வேகேட் இருப்பதால் கேட் அடிக்கடி மூடப்படுகிறது. எனவே சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து, நீண்ட ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்து ரெயில்வே கேட்டின் அருகில் உள்ள ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள 117 வீடுகளை அகற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து நோட்டீஸ் வழங்கினர்.

இந்த நிலையில், நேற்று அந்த இடத்தை அகற்றுவது என முடிவு செய்து ரெயில்வே உதவி கேட்ட பொறியாளர் சேகர், மண்டல பொறியாளர் வெங்கடேசன், திருவொற்றியூர் தாசில்தார் மோகன்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், ரெயில்வே அதிகாரிகள் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்க பொக்லைன் எந்திரங்களுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பொதுமக்கள் முற்றுகை

இதனையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடி 50 ஆண்டுக்கு மேலாக வசித்து வரும் தங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை வீட்டை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் வார்டு கவுன்சிலர் கே.கார்த்திக் ஆகியோர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது தொடர்பாக டெல்லியில் இருக்கும் வடசென்னை எம்.பி.கலாநிதி வீராசாமி வீடுகளை இடிக்க 3 மாத காலம் அவகாசம் கோரி மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கடிதம் வழங்கினார். இந்த நிலையில் அதிகாரிகள் வீடுகள் இடிக்கும் பணிகளை தற்காலிகமாக ஒத்திவைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்