பொதுமக்கள் விரட்டி சென்றதால் மோட்டார் சைக்கிள் திருடன் கிணற்றில் தவறி விழுந்து பலி

பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள் திருட வந்த வாலிபரை பொதுமக்கள் விரட்டி சென்றதால் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.

Update: 2022-04-02 00:09 GMT
பூந்தமல்லி,

பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி பக்கிங்காம் தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள் அந்த நபரை பிடிக்க முயன்ற போது, அதிர்ச்சி அடைந்த அந்த நபர் பொதுமக்களை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை துரத்தி சென்ற நிலையில், அருகில் இருந்த காலி மைதானத்திற்குள் எகிறி குதித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென மாயமான அந்த நபரை பொதுமக்கள் தேடிய போது, அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த நபரை தேடி பார்த்தனர்.

கிணற்றில் மூழ்கினார்

இரவு நேரம் ஆனதால் அந்த நபரை மீட்க முடியாத தீயணைப்பு வீரர்கள், நேற்று காலை மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது நீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்த திருடனின் உடலை மீட்டனர். இதைத்தொடர்ந்து திருடனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பூந்தமல்லி போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து போன நபர் திண்டுக்கல்லை சேர்ந்த சங்கர்கணேஷ்(வயது 29) என்பதும், போதையில் மோட்டார் சைக்கிளை திருட வந்த போது பொதுமக்கள் தங்களை பிடித்து அடித்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் ஓடிய போது கிணற்றில் தவறி விழுந்து இறந்தது உறுதியானது. இது குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்