கந்து வட்டி கேட்டு மிரட்டல்: காய்கறி வியாபாரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக காய்கறி வியாபாரி தனது குடும்பத்தினருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்,
தீக்குளிக்க முயற்சி
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 35). காய்கறி வியாபாரி. இவருடைய மனைவி திரிஷா (25), மாமியார் மாரியம்மாள் (40). இவர்கள் 3 பேரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கந்து வட்டி கேட்டு மிரட்டல்
எனது மனைவி, மாமியார் ஆகியோருடன் தலைவாசல் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறேன். வியாபார தேவைக்காக வரகூரை சேர்ந்த ஒருவரிடம் வட்டிக்கு ரூ.20 ஆயிரம் கடன் வாங்கினேன். அதில் ரூ.16 ஆயிரத்தை வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டேன். மீதி ரூ.4 ஆயிரம் மட்டுமே கொடுக்க வேண்டியுள்ளது.
அந்த பணத்தை திருப்பி செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் சம்பந்தப்பட்ட நபர், கந்து வட்டி கேட்டு வீடு புகுந்து எங்களை தகாத வார்த்தையால் பேசி அடித்து உதைத்தார். கர்ப்பிணியான எனது மனைவியின் வயிற்றில் எட்டி தாக்கியதால் அவர் காயம் அடைந்தார். இது தொடர்பாக தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாக்குதலில் காயம் அடைந்த 3 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது வெளியில் வந்துள்ளோம். எனவே, அதிக வட்டி கேட்டு கொடுமைப்படுத்தும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணை
இதைத்தொடர்ந்து நாகராஜன் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.