பா.ஜனதா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க கர்நாடக ஐகோர்ட்டு மறுப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் பேசி வரும் பா.ஜனதா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கர்நாடக ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

Update: 2022-04-01 21:36 GMT
பெங்களூரு: முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் பேசி வரும் பா.ஜனதா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கர்நாடக ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

பா.ஜனதா தலைவர்கள் கருத்து

கர்நாடகத்தில் அரசு பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். அதன்பிறகு, இந்து கோவில்களில், இந்து அல்லாத பிற வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

தற்போது முஸ்லிம்கள் நடத்தும் கடைகளில் ஹலால் இறைச்சி விற்பனை செய்வதற்கு எதிராக இந்து அமைப்பினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த விவகாரங்கள் தொடர்பாக மத்திய இணை மந்திரி ஷோபா, கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் இந்து அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பேசி வந்தனர்.

ஐகோர்ட்டு மறுப்பு

இந்த நிலையில், கர்நாடகத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் பேசி வரும் மத்திய இணை மந்திரி ஷோபா, மந்திரி ஈசுவரப்பா, பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களான ரேணுகாச்சார்யா, யத்னால், எம்.பி.க்களான தேஜஸ்வி சூர்யா, பிரதாப் சிம்ஹா உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மண்டியாவை சேர்ந்த முகமது கலீல் உல்லா என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்து பா.ஜனதா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் அவர் கூறி இருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கர்நாடக ஐகோர்ட்டு மறுத்து விட்டது. மற்ற மனுக்கள் போலவே இந்த மனு மீதும் விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்