மங்களூரு தொழில் அதிபருக்கு சொந்தமான ரூ.8¼ கோடி சொத்துக்கள் முடக்கம்
சட்டவிரோத பண பரிமாற்ற புகாரில் சிக்கியுள்ள மங்களூரு தொழில் அதிபருக்கு சொந்தமான ரூ.8¼ கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மங்களூரு: சட்டவிரோத பண பரிமாற்ற புகாரில் சிக்கியுள்ள மங்களூரு தொழில் அதிபருக்கு சொந்தமான ரூ.8¼ கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சட்டவிரோத பண பரிமாற்றம்
மங்களூரு அருகே அட்டாவர் பகுதியை சேர்ந்தவர் இக்பால் அகமது. தொழில் அதிபரான இவர், பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் மீது சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் முறைகேடாக சொத்துகளை வாங்கி குவித்திருப்பதாக அமலாக்கத்துறைக்கு புகார் வந்தது. அதை பரிசீலனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
ரூ.8.30 கோடி சொத்துக்கள் முடக்கம்
அப்போது துபாயில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்திருப்பதும், இந்தியா ரூபாய் நோட்டுகளை துபாய் டாலராக மாற்றி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அந்த பணத்தில் மங்களூரு அட்டாவர் பகுதியில் ரூ.8.30 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்திருந்து தெரியவந்தது. அந்த சொத்துகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லை.
இந்த நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் வாங்கியதாக கூறி ரூ.8.30 கோடி சொத்துகளையும் முடக்கி அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தொழில் அதிபர் இக்பால் அகமதுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.