குழித்துறை நகராட்சியின் முதல் கூட்டம்: காய்கறி சந்தையில் புதிய கடைகள் கட்டுவது தொடர்பாக காரசார விவாதம்

மார்த்தாண்டம் காய்கறி சந்தையில் புதிய கடைகள் கட்டுவது தொடர்பாக குழித்துறை நகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.

Update: 2022-04-01 20:38 GMT
குழித்துறை, 
மார்த்தாண்டம் காய்கறி சந்தையில் புதிய கடைகள் கட்டுவது தொடர்பாக குழித்துறை நகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.
நகராட்சி முதல் கூட்டம்
குழித்துறை நகராட்சி முதல் கூட்டம் அதன் தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமையில் நகராட்சி கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் பிரபின் ராஜா, ஆணையர் ராமதிலகம், சுகாதார அதிகாரி ஸ்டாலின் குமார், மேலாளர் ஜெயன், சுகாதார ஆய்வாளர் குருசாமி, நகராட்சி பொறியாளர் பேரின்பம் மற்றும் அதிகாரிகளும், கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
காய்கறி சந்தை கட்டிடங்கள்
கூட்டத்தில், மார்த்தாண்டம் காய்கறி சந்தையில் 5 பகுதிகளில் செயல்படும் கடைகளை இடித்து விட்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய தினசரி சந்தை அமைக்கப்பட உள்ளதாகவும், கடைகள் கட்டி முடிக்கும் வரை லாரி பேட்டையில் தற்காலிகமாக காய்கறி சந்தை அமைப்பது பற்றிய நகராட்சி தலைவரின் தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது கவுன்சிலர்கள் பேசியதாவது:-
சர்தார் ஷா: காய்கறி சந்தையில் கடைகள் கட்டும் வரை மீன் கமிஷன் பகுதியை மாற்றுவதால் அவர்களுக்கு சில இழப்புகள் ஏற்படும். எனவே காய்கறி சந்தையை மார்த்தாண்டம் பஸ் நிலையத்திற்கு மாற்ற முடியுமா? என ஆலோசிக்கலாம்.
விஜூ: முன்பு லாரி பேட்டை லாரி நிறுத்தும் இடமாகத்தான் இருந்தது. அது மீன் கமிஷன் செய்யும் இடம் அல்ல. பஸ் நிலையத்தில் காய்கறி சந்தையை மாற்றியமைக்க முடியாது.
ஆட்லின் கெலின்: மீன் கமிஷன் சந்தையை இடமாற்றம் செய்ய 3 மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
நகராட்சி தலைவர் விளக்கம்
நகராட்சி தலைவர்: மீன் கமிஷன் சந்தையை அங்கிருந்து மாற்ற மாட்டோம். முந்தைய ஆணையாளர் ஏதோ ஒரு காரணத்துக்காக லாரி பேட்டையில் மீன் கமிஷன் பகுதியை அமைத்து விட்டார். காய்கறி சந்தையில் கடைகள் இடிக்கும்போது காய்கறி வியாபாரம் செய்வதற்கு இடம் வேண்டும். மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் காய்கறி சந்தை அமைக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. எனவே காய்கறி சந்தைக்கு மாற்று இடம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் மீன் கமிஷன் சந்தை அங்குதான் செயல்படும். காய்கறி சந்தையை லாரி பேட்டையை தவிர வேறு எங்கு கொண்டு செல்வது அதற்குரிய இடம் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.
மேலும் பஸ்கள் இயக்கப்படுவது தொடர்பாக கவுன்சிலர்கள் தெரிவித்த கேள்விக்கு, மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்கள் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக செல்ல எல்லா உறுப்பினர்களும் ஒத்துழைத்தால் போராட்டம் நடத்த தயார் என பொன் ஆசைதம்பி தெரிவித்தார். மேலும் நுண்ணுயிர் உரக்கிடங்கு மாற்றும் தீர்மானம் குறித்தும் விவாதம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்