கல்லல் யூனியன் வார்டு தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி

மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில் கல்லல் யூனியன் வார்டு தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்று உள்ளார்.

Update: 2022-04-01 19:14 GMT
காரைக்குடி,

மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில் கல்லல் யூனியன் வார்டு தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்று உள்ளார்.

மறுவாக்கு எண்ணிக்கை

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் 9-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் கோமளவள்ளி, ஏற்கனவே  நடைபெற்ற தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் சரஸ்வதியை விட 3 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சரஸ்வதி தரப்பினர் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்து இருக்கிறது எனவும் எனவே மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் 9-வது வார்டில் பதிவான ஓட்டுக்களை மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிட்டது. அதற்காக வக்கீல், அதிகாரிகள் அடங்கிய குழுவினரையும் நியமித்தது. 

அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி

இதையொட்டி நேற்று கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மதுரை ஐகோர்ட்டு நியமித்த அதிகாரிகள், குழுவினர் மற்றும் தேவகோட்டை கோட்டாட்சியர், கல்லல் ஊராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கையை நடத்தினர். அப்போது, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பதிவான வாக்குகள்-3,145
கோமளவள்ளி(அ.தி.மு.க.)- 1,421 
சரஸ்வதி(தி.மு.க.)-1,420
அ.ம.மு.க. வேட்பாளர்-188
செல்லாதவை-116
இந்நிலையில் 3 ஓட்டில் வெற்றி பெற்றதாக அறிவித்த கோமளவள்ளி தற்போது நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 1 ஓட்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்