பள்ளி வளாகத்தை தூய்மை செய்த ஆசிரியர்கள்

விழுப்புரம் அருகே பள்ளி வளாகத்தை ஆசிரியர்கள் தூய்மை செய்தனர்.

Update: 2022-04-01 19:11 GMT
விழுப்புரம், 

விழுப்புரத்தை அடுத்த சிறுவந்தாடு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பணிபுரிந்த துப்புரவு பணியாளர் விமலா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து பள்ளியின் தூய்மைப்பணிகளை, கிராம ஊராட்சி தூய்மைப்பணியாளர்கள் செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கிராம தூய்மைப் பணியாளர்கள், பள்ளியில் தூய்மைப்பணியை மேற்கொள்ளவில்லை என்பதால் பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகளாக பரவிக்கிடந்தது. இந்த சூழலில் நேற்று காலை பள்ளிக்கு வருகைபுரிந்த தலைமை ஆசிரியர் முருகவேல் மற்றும் ஆசிரியர் செல்வி ஆகியோர் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பள்ளியை தூய்மை செய்யும்படி வலியுறுத்தினர். அதற்கு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து குப்பைகளை வெளியில் கொட்டினால்தான், அகற்றுவோம் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. 

இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகவேல் மற்றும் ஆசிரியை செல்வி ஆகியோர் பள்ளி வளாகத்தில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்பணியில் ஈடுபட்டு சுத்தம் செய்தனர். மேலும் பள்ளி நிர்வாகம் சார்பில் தூய்மைப்பணிக்கு ஒரு நபரை நியமிக்க கூறியுள்ளனர். அதற்கு ஊராட்சி நிர்வாகம், தாங்கள் கூறும் நபர்களைதான் பணி நியமனம் செய்ய வேண்டும் எனக்கூறியதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிப்படைந்துள்ளதால் எஸ்.மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தூய்மைப்பணியாளர்களை நியமனம் செய்ய மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரிைய பள்ளி வளாகத்தை தூய்மை செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் செய்திகள்