மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதை பட்டு விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வலியுறுத்தல்
மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதை பட்டு விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர்:
தமிழக அரசின் பட்டு வளர்ச்சி துறையின் திருச்சி உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பலூர் தொழில்நுட்ப சேவை மையத்திற்கு உட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை தாங்கி, க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் முதல் பரிசாக கொடுக்கூர் பட்டு விவசாயி செல்வகுமாருக்கு ரூ.25 ஆயிரமும், 2-ம் பரிசாக வேம்புக்குடி விவசாயி கலியமூர்த்திக்கு ரூ.20 ஆயிரமும், மூன்றாம் பரிசாக கண்டிராதித்தம் விவசாயி ஜெயபாலுக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கினார். விழாவில் கலெக்டர் பேசுகையில், தமிழக அரசு பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு நடவு மானியம் ரூ.10 ஆயிரத்து 500-ம், புழு வளர்ப்பு குடிலுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், புழு வளர்ப்பு தளவாடங்களுக்கு ரூ.52 ஆயிரத்து 500-ம் வழங்கி வருகிறது. மேலும், பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் தற்போது பட்டுக்கூடுகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.750-க்கு மேல் லாபம் கிடைப்பதால், விவசாயிகள் ஆர்வமுடன் அதிகமாக பயிரிட்டுள்ளனர். இதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதால், இதனை அரியலூர் மாவட்ட பட்டு விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.
இதில் பெரம்பலூர் தொழில்நுட்ப சேவை மைய உதவி ஆய்வாளர் மணிகண்டன், இளநிலை ஆய்வாளர் ஜோதி, பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.