பண்ருட்டி ஜவுளிக்கடை அதிபர் தற்கொலை முயற்சி

கடனை செலுத்துமாறு வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததால் பண்ருட்டி ஜவுளிக்கடை அதிபர் விஷம் குடித்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-04-01 18:49 GMT
பண்ருட்டி, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் வசித்து வருபவர் கே.வி.ஆர்.மோகன்(வயது 65). இவர், அதே பகுதியில் பிரபல ஜவுளிக்கடை நடத்தி வந்தார். 

கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது. 
இந்த கடையை சீரமைக்கவும், புதிய துணிகள் வாங்கி விற்பனைக்காக வைப்பதற்காகவும் வங்கி ஒன்றில் கே.வி.ஆர்.மோகன் கடன் வாங்கினார்.

விஷம் குடித்தார் 

அதுமட்டுமின்றி கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டாக கடையில் வியாபாரம் சரியாக நடைபெறவில்லை. தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையும் அதிகரித்தது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் வங்கி அதிகாரிகள், அவரது வீட்டிற்கு சென்று கடனை செலுத்துமாறு நெருக்கடி கொடுத்தனர். கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்த கே.வி.ஆர்.மோகன், நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்தார். 

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை 

சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

கடன் தொல்லையால் பண்ருட்டியில் ஜவுளிக்கடை அதிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்