தர்மபுரி பகுதியில் வீடுகளில் கைவரிசை காட்டிய பிரபல திருடன் கைது 10 பவுன் நகை ரூ 70 ஆயிரம் பறிமுதல்
தர்மபுரி பகுதியில் வீடுகளில் கைவரிசை காட்டிய பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 10 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி வெண்ணாம்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தினகர். இவருடைய மனைவி பரிமளா. கடந்த 13-ந்தேதி தினகர், சென்னைக்கு வேலை விஷயமாக சென்றிருந்தார். பரிமளா, காவேரிப்பட்டணத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர் பரிமளா, வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் பீரோவில் இருந்த 6 பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. தர்மபுரி கலெக்டரேட் பகுதியை சேர்ந்த கோவிந்தராவ் (வயது 70) என்பவரின் பூட்டப்பட்ட வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 பவுன் நகை திருட்டு போனது. இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தர்மபுரியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சுந்தரவேல் (43) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கிருஷ்ணாபுரம், அதியமான்கோட்டை பகுதிகளில் உள்ள வீடுகளில் நகை, பணம் திருடிய பிரபல திருடன் என தெரியவந்தது. இதையடுத்து சுந்தரவேலை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.