போச்சம்பள்ளி அருகே உலக்கையால் அடித்து விவசாயி கொலை அண்ணன் தம்பி கைது
போச்சம்பள்ளி அருகே விவசாயியை அடித்து கொன்ற அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே விவசாயியை அடித்து கொன்ற அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தகராறு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மொளுகனூரை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 50). விவசாயி. இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவர்கள் முருகன் (57), லட்சுமணன் (48). அண்ணன்-தம்பி ஆவார்கள். அந்த பகுதியில் லட்சுமணன் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
வீடு கட்டும் பணியின் போது அள்ளப்படும் மண் அருகில் நெல் பயிரிட்டிருந்த வேலாயுதத்தின் நிலத்தில் விழுந்தது. இது குறித்து வேலாயுதம் லட்சுமணனிடம் கடந்த 28-ந் தேதி கூறினார். அப்போது வேலாயுதம், முருகன், லட்சுமணன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அங்கிருந்த உலக்கையால் வேலாயுதத்தின் மண்டையில் அடித்தார்.
அண்ணன்-தம்பி கைது
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், லட்சுமணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வேலாயுதம் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் முருகன், லட்சுமணனை கொலை வழக்கின் கீழ் கைது செய்தனர்.