வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

கரூரில் கடந்த ஆண்டு நடந்த விபத்துகளில் 400 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.

Update: 2022-04-01 17:29 GMT
கரூர்
கரூர், 
விழிப்புணர்வு கூட்டம்
கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் கால் டாக்சி, ஆட்டோ, மினிபஸ் மற்றும் பஸ் டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் வரவேற்றார். கரூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு), கீதாஞ்சலி (சைபர் கிரைம்) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். 
படிக்கட்டில் பயணம்
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பேசியதாவது:- தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மிக அதிகமாக உள்ளது. பெண்கள், குழந்தைகள் வாகனங்களில் பாதுகாப்பாக செல்வதை உணர வேண்டும். பெண்கள், குழந்தைகள் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான வாகனம் என்று அனைத்து வாகனங்களிலும் எழுத வேண்டும். 
பள்ளி மாணவர்கள் பஸ்சில் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். 
வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சாலை விபத்தில் கடந்த ஆண்டில் 1,100 விபத்துகளில் 400 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு சாலை விபத்து குறைந்து உள்ளது. வாகன விபத்துகளில் 50 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு இறந்து விடுகின்றனர். 
உயிர்கள் காப்பாற்றப்படும்
காயம் ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டாலோ அல்லது மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றாலோ அவர்களில் 50 சதவீதத்தினரின் உயிரிழப்பை தவிர்க்க முடியும். இதில் டிரைவர்களின் பங்கு பெரியது. விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை இலவசமாக கிடைக்கும். இதனால் உயிர்கள் காப்பாற்றப்படும். 
அனைவரும் ஹெல்மெட் கண்டிப்பாக அணிய வேண்டும். தானாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் சாலைவிபத்தில் வருடத்திற்கு கிட்டதட்ட 14 ஆயிரம் பேர் இறக்கின்றனர். கரூர் மாவட்டத்தில் 400 பேர் இறக்கின்றனர். ஆனால் கொலை குற்றத்தால் இறப்பவர்கள் 20-க்கும் குறைவான எண்ணிக்கையில் இறக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதில், 100-க்கும் மேற்பட்ட கால் டாக்சி, ஆட்டோ, மினிபஸ் டிரைவர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்