நுகர்வு பற்றிய விவரங்களை அறிந்து மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

நுகர்வு பற்றிய விவரங்களை அறிந்து மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

Update: 2022-04-01 17:09 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம், உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பள்ளி-கல்லூரிகளில் கட்டுரைப்போட்டிகள், பேச்சுப்போட்டிகள் மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது நுகர்வு. சந்தைப்படுத்தப்படும் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோர், பொருட்களின் தரம், அளவு, வீரியம், தூய்மை நிலை, விலை ஆகியவை குறித்து தகவல் அறியவும், நியாயமற்ற வணிக நடவடிக்கைகளுக்கு எதிராக பரிகாரம் பெறுவதற்கான உரிமைகளும் நுகர்வோருக்கு அளிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விலை கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு உரிய ரசீது பெற்றிருக்கும் நிலையில் அந்தப்பொருளில் அல்லது சேவையில் குறைபாடு இருந்தால் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்து தீர்வு பெறலாம்.இயந்திரமயமான இன்றைய உலகில் நாம் ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறோம். இதற்கு விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இல்லாததே காரணம். அனைவரும் தமது உரிமையை காத்திடவும் ஏமாற்றத்தை தவிர்த்திடவும் எப்போதும் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

விழிப்புடன்

காலாவதியான கலப்படமான பொருட்களை விற்பதும், அச்சிடப்பட்ட விலைக்கு மேல் பொருட்களை அதிகம் விலை வைத்து விற்பதும் அதற்கான ரசீதுகளை தராமல் இருப்பது மூலமாக இன்றைய நுகர்வோர்கள் அதிகம் ஏமாற்றப்படுகின்றனர். சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினைக்காகவே நுகர்வோர் நீதிமன்றங்கள், நுகர்வோர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. நுகர்வோர் நலனை உறுதிசெய்ய அரசு பல சட்டங்களையும் அமைப்புகளையும் உருவாக்கியுள்ளது. நுகர்வோர்கள் பெரும்பாலும் பொருட்களை எடுக்கும்போது அவற்றின் விலை, தேதி, தரம், முத்திரை போன்றவற்றை சரிபார்க்க வேண்டும், பொருட்களுக்குரிய ரசீதுகளை கம்பெனி பெயர், முத்திரை மற்றும் கையொப்பத்துடன் பெற வேண்டும், தவறு நடக்கும்பட்சத்தில் அதை தைரியத்துடன் எதிர்கொள்ள முன்வர வேண்டும், மொத்தத்தில் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மகாராணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்