சத்துவாச்சாரியில் சிமெண்டுசாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு. பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர்
சத்துவாச்சாரியில் சிமெண்டுசாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்தனர்.
வேலூர்
சத்துவாச்சாரியில் சிமெண்டுசாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்தனர்.
சிமெண்டு சாலை
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிமெண்டு சாலை, தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சத்துவாச்சாரி 2-வது மண்டல அலுவலக சாலையையொட்டி 5-வது பிரதான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த சாலையில் இருந்த ஏராளமான மரங்களை அகற்றிவிட்டு கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
தற்போது அங்கு புதிதாக சாலை போடுவதற்காக அந்த தெருவில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே மரங்கள் இருந்த இடத்தில் அந்த தெருவில் உள்ள பொதுமக்கள் 25-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
சிறைபிடித்தனர்
இந்தநிலையில் அந்தசாலையில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பணிகள் பொக்லைன் எந்திரம் மூலம் காலை நடந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பணிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மரக்கன்றுகள்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ஏற்கனவே இங்கே இருந்த மரங்களை வெட்டி அகற்றி விட்டனர். தற்போது நாங்கள் புதிதாக மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறோம். சிமெண்டு சாலை அமைத்தால் மரக்கன்றுகள் அனைத்தும் நாசமாகிவிடும். மேலும் புதிதாக மரங்களை நட்டு வளர்க்க முடியாத நிலை ஏற்படும். எனவே இந்த தெருவில் சிமெண்டு சாலை அமைப்பதை கைவிட்டு தார்சாலை அமைக்க வேண்டும் என்றனர்.