விருத்தாசலம் அருகே உயர் மின்னழுத்த பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

விருத்தாசலம் அருகே உயர் மின்னழுத்த பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

Update: 2022-04-01 16:56 GMT
கம்மாபுரம்

விருத்தாசலம் பூதாமூர் துணை மின் நிலையத்தில் இருந்து வி.குமாரமங்கலம் வரை உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக 80-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் நடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து, பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, தனிநபர் ஒருவர் தொடங்க இருக்கும் ரைஸ்மில்லுக்கு மின்சாரம் கொடுப்பதற்காகத்தான், உயர்மின் அழுத்த பாதை அமைக்கிறார்கள். இந்த மின்கம்பிகள் அந்த பகுதியில் உள்ள குடிசை வீடுகளுக்கு அருகே செல்வதால் ,மின்விபத்துகள் நேரிடும் நிலை உள்ளது. மேலும், சாலையோரம் இருந்த ஏராளமான மரங்களையும் வெட்டி அகற்றி உள்ளனர்.  ஏற்கனவே சாலை பணிக்காக மரங்கள் அனைத்தும் வெட்டி அகற்றப்பட்ட நிலையில் தற்போது மின்பாதை அமைக்கும் பணிக்காக கூடுதலாக மரங்கள் வெட்டி அகற்றப்படுவதால், சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே  மின் பாதையை மாற்று வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விரைந்து வந்த கம்மாபுரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.  இதையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்