ரூ.2 கோடியில் நூலகத்துடன் அறிவுசார் மையம் கட்டும் பணி
மயிலாடுதுறையில் ரூ 2 கோடியில் நூலகத்துடன் அறிவுசார் மையம் கட்டும் பணியை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை, ஏப்.2-
மயிலாடுதுறையில் ரூ.2 கோடியில் நூலகத்துடன் அறிவுசார் மையம் கட்டும் பணியை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
அறிவுசார் மையம்
மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி செலவில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த ஆண்டு இளைஞர், குழந்தைகள், பொதுமக்கள் ஆகியோர் பயன்படுத்த கூடிய வகையில் 50 இடங்களில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ரூ.2 கோடியில் கட்டப்படுகிறது
அதன்படி மயிலாடுதுறை நகரில் தருமபுரம் சாலையில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் ரூ.2 கோடி செலவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் இளைஞர்கள், மகளிர், குழந்தைகளின் அறிவை வளர்க்கக்கூடிய திட்டமாகும். குழந்தைகளுக்கு அறிவை மேம்படுத்தக்கூடிய தொடுதிரை, ஒலி அமைப்பு போன்ற கருவிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்பட உள்ளது. இளைஞர்களுக்கு போட்டித்தேர்வை எதிர்கொள்ள பயனுள்ள வகையில் இந்த நூலகம் அமைய உள்ளது. இளைஞர்கள் போட்டி தேர்வுகளுக்கு படிக்க அனைத்து புத்தகங்களும் இங்கு கொண்டு வரப்படும்.
இணையதள வசதி
இதேபோல, வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் கட்டப்படுகிறது. இதில் மாணவ, மாணவிகள் படிக்கும் அறைகள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் படிக்கும் அறைகள், இணையதள வசதியுடன் கூடிய கணினி அறை, கணினி உபகரணங்கள் மூலம் பயிற்சி வழங்கும் அறை, சிறுவர்கள் விளையாட வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை நகராட்சி பொறியாளர் சனல்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.