ராட்சத குழாய்களை இறக்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே ஆயில் நிறுவனத்தின் ராட்சத குழாய்களை இறக்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே ஆயில் நிறுவனத்தின் ராட்சத குழாய்களை இறக்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே நீடூரை அடுத்த வை.பட்டவர்த்தி கிராமத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் கனரக வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்ட ராட்சத குழாய்களை இறக்கி வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அதனை பொருட்படுத்தாமல் அந்த நிறுவனம் 5-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் ராட்சத குழாய்களை கொண்டு வந்து இறக்கி வருகிறது.
எண்ணூர்-தூத்துக்குடி இடையே எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்காக இந்த ராட்சத குழாய்கள் இறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அதனை ஏற்காத பொதுமக்கள் நேற்று திடீரென குழாய்களை அப்புறப்படுத்தக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் காளிதாசன், பா.ம.க. மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ரவி, இயற்கை விவசாயி ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை-மணல்மேடு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உதவி கலெக்டர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி சுமூக தீர்வு காண்பது என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.