சமையல் எண்ணெய், கியாஸ் விலை அதிகரிப்பு எதிரொலி; பெங்களூருவில் ஓட்டல் உணவுகளின் விலை உயருகிறது.
சமையல் எண்ணெய், கியாஸ் விலை அதிகரிப்பு காரணமாக பெங்களூருவில் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
சிலிண்டர் விலை ரூ.250 உயர்வு
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததன் காரணமாக சமையல் எண்ணெய் விலை திடீரென்று உயர்ந்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வணிக பயன்பாட்டுக்காக உபயோகிக்கப்படும் கியாஸ் சிலிண்டர்களின் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) ரூ.100 உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், வணிக சிலிண்டர்களின் விலை நேற்று ரூ.250 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சமையல் எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெங்களூருவில் சிறிய அளவிலான ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உரிமையாளர்கள் உயர்த்தி உள்ளனர்.
ஓட்டல்களில் விலை உயர்வு
அதே நேரத்தில் பெரிய ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்திருப்பதாகவும், இந்த மாதம் (ஏப்ரல்) முதல் உயர்த்தப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பி.சி.ராவ் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று ஏப்ரல் மாதம் பிறந்திருந்தாலும் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை.
இந்த நிலையில், சிலிண்டரின் விலை நேற்று ரூ.250 உயர்த்தப்பட்டு இருப்பதால், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
2-வது வாரம் முதல் அமல்
மேலும் இந்த விலை உயர்வு இந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து அமல்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் ஓட்டல் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதுபற்றி ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பி.சி.ராவ் நிருபர்களிடம் கூறுகையில், சமையல் எண்ணெய், கியாஸ் சிலிண்டர்களின் விலை உயர்ந்திருப்பதால், ஓட்டல்களில் அனைத்து விதமான உணவு பொருட்களின் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகும். 10 சதவீதம் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 4-ந் தேதி பெங்களூருவில் ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசித்து உணவு பொருட்களின் விலை உயர்வு பற்றி அறிவிக்கப்படும் என்றார்.