சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய பெண் கைதி பிடிபட்டார்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய பெண் கைதி பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய பெண் கைதி பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி(வயது 57). இவர் அந்த பகுதியில் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்தார். இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கஸ்தூரியை பேரளம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவாரூர் மகளிர் கிளை சிறையில் அடைத்தனர்.
கடந்த 23-ந் தேதி அன்று கஸ்தூரிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், உள்நோயாளிகள் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தப்பியோட்டம்
ஆஸ்பத்திரியில் கஸ்தூரிக்கு பாதுகாப்பாக பேரளம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த 2 பெண் போலீசார் பகல், இரவு சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு கஸ்தூரி சிகிச்சை பெற்று வந்த வார்டில் பெண் போலீஸ் ஒருவர் பணியில் இருந்தார். அப்போது அந்த பெண் போலீஸ் அயர்ந்த நேரத்தில், ஆஸ்பத்திரியில் இருந்து கஸ்தூரி தப்பி ஓடினார்.
பிடிபட்டார்
இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கஸ்தூரியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் தனது உறவினர் வீட்டில் இருந்த கஸ்தூரியை போலீசார் பிடித்து அவரை திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து கைதி தப்பி ஓடியதும், பிடிபட்டதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
----