தமிழக- ஆந்திர எல்லைப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்?. இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட வரவேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை
வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லைப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுவதால், பொதுமக்கள் இரவில் நடமாட வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லைப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுவதால், பொதுமக்கள் இரவில் நடமாட வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம்?
திருப்பத்தூர் மாவட்டம், தமிழக-ஆந்திர எல்லை பகுதியை ஒட்டியுள்ள வாணியம்பாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட குளிக்கொல்லை, கொரிப்பள்ளம், எத்தமலை மலையடிவாரம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதமாக இரவு நேரங்களில் சிறுத்தைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியதில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் நள்ளிரவு கொரிப்பள்ளம் பகுதியில் விவசாயி ஒருவர் வளர்த்து வந்த ஆட்டை சிறுத்தை கடித்து குதறியதில் ஆடு பலியாகி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வெளியே நடமாட வேண்டாம்
இதனையடுத்து வாணியம்பாடி வனச்சரக அலுவலர் எஸ்.இளங்கோ தலைமையில் வனத்துறையினர் தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள குளிக்கொல்லை, கொரிப்பள்ளம், தகரகுப்பம், நாயனசெருவு, கள்ளியூர் ஆகிய பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை செய்தனர். இதேபோல் திம்மாம்பேட்டை போலீசாரும், பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.