குற்றம் சாட்டப்பட்டவருடன், புகார் கொடுத்தவரும் கைதாகி சிறையில் அடைப்பு

ரூ.16 லட்சம் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருடன், புகார் கொடுத்தவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோட்டூர்புரம் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2022-04-01 10:30 GMT
ரூ.16 லட்சம் மோசடி புகார்

சென்னை தரமணி, மகாத்மா காந்தி நகர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வையாபுரி (வயது 50). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக தற்காலிகமாக பணி செய்து வருகிறேன். என்னைப்போல சிவகுமார் என்பவரும் உதவியாளர் பணியில் உள்ளார். தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க உள்ளனர் என்றும், ரூ.2 லட்சம் தந்தால் அதற்கு ஏற்பாடு செய்வதாகவும் சிவகுமார் தெரிவித்தார்.

அதை உண்மை என்று நம்பி, நான் ரூ.2 லட்சம் கொடுத்தேன். அதேபோல மேலும் பல்வேறு வேலைகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் எனக்கு தெரிந்தவர்களிடம் வசூல் செய்து, ரூ.16 லட்சத்தை சிவகுமாரிடம் கொடுத்தேன். அவர் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. எனக்கும் பணி நிரந்தரம் கிடைக்கவில்லை.

என்னிடம் வாங்கிய ரூ.2 லட்சம் உள்பட ரூ.18 லட்சத்தையும் ஏமாற்றி விட்டார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து ரூ.18 லட்சத்தையும் மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மோசடியில் வையாபுரிக்கும் பங்கு

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கோட்டூர்புரம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

புகார் கூறப்பட்ட சிவகுமார் (51) வேளச்சேரி, விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர். அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல்கள் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரூ.18 லட்சம் கொடுத்தது உண்மை, ஆனால் அந்த பணத்தை நான் மட்டும் செலவு செய்யவில்லை. வையாபுரியும் என்னுடன் சேர்ந்துதான் செலவழித்தார் என்று கூறி அதற்கான ஆதாரத்தையும் போலீசாரிடம் தெரிவித்தார்.

மேலும் போலீசில் சிக்காமல் இருப்பதற்காக, வையாபுரி உத்தமர் வேடம் போட்டு, என் மீது புகார் கூறியுள்ளார் என்று சிவகுமார் கூறியதாக தெரிகிறது. எனவே இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

இருவருக்கும் ஜெயில்

போலீஸ் விசாரணையில் புகார் கொடுத்த வையாபுரியும் குற்றம் புரிந்திருப்பது உறுதியானது. எனவே அவரை முதல் குற்றவாளியாகவும், குற்றம் சுமத்தப்பட்ட சிவகுமாரை வழக்கில் 2-வது குற்றவாளியாகவும் போலீசார் சேர்த்தனர். வையாபுரியும், சிவகுமாரும் கைது செய்யப்பட்டனர். இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து கோட்டூர்புரம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்