வாழப்பாடி அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 7 பேர் படுகாயம்

வாழப்பாடி அருகே வேன் கவிழ்ந்து விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-03-31 22:27 GMT
வாழப்பாடி,
சேலம் மாவட்டம் வலசையூர் பகுதியை சேர்ந்த உறவினர்கள் 18 பேர் சேர்ந்து அமாவாசை அன்று அம்மனை வழிபட மேல்மலையனூர் கிராமத்திற்கு வேனில் புறப்பட்டு சென்றனர். வாழப்பாடி அருகே உள்ள பள்ளத்தாதனூர் பகுதியில் சென்ற போது சாலையை ஒரு ஆடு கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க வேனை டிரைவர் திடீரென பிரேக் போட்டு திருப்பி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வேன் சாலையில் கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். வேனில் பயணம் செய்த குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 53), அவருடைய மனைவி சித்ரா (53), நந்தகோபால் (23), அயோத்தியாப்பட்டணம் விஜி (30), ராஜாக்கண்ணு (70), வலசையூர் விஜயலட்சுமி (60), கன்னங்குறிச்சி சுருதி (14) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் தங்கராஜிக்கு 2 கால்களும் முறிந்தன.. விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த பகுதி பொதுமக்களின் துணையோடு வேன் தூக்கி நிறுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த விபத்தால் அயோத்தியாப்பட்டணம்-பேளூர் சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்