ஆட்டோ மீது லாரி மோதல்; 3 பேர் சாவு

சித்ரதுர்கா அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-03-31 21:41 GMT
சிக்கமகளூரு: சித்ரதுர்கா அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். 

 ஆட்டோ மீது லாரி மோதல் 

தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா செலகோடி கிராமத்தை சேர்ந்தவர் ஹாலப்பா(வயது 70), ருத்ரப்பா(58), பசவராஜப்பா(45). ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களான இவர்கள், சித்ரதுர்கா அருகே மாரகட்டேவில் இறந்த உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆட்டோவில் நேற்றுமுன்தினம் இரவு சென்றனர். இவர்களுடன் மேலும் 6 பேர் சென்றனர். 

சித்ரதுர்கா தாலுகா மாரகட்டே அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியும், இவர்கள் சென்ற ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து பலத்த சேதமடைந்தது. இடிபாடுகளில் சிக்கி ஆட்டோவில் இருந்த ஹாலப்பா, ருத்ரப்பா, பசவராஜப்பா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மற்ற 6 பேர் காயம் அடைந்தனர். 

 3 பேர் சாவு

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் விபத்தில் காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஹாலப்பா, ருத்ரப்பா, பசவராஜப்பா ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த கல்லேசப்பா, சந்திரப்பா, பார்வதம்மா, ருத்ரேஷ், சித்தேஷ் உள்பட 6 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுபற்றி தகவல் அறிந்த சித்ரதுர்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

 சோகம்

இந்த விபத்து குறித்து சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினர் இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்றபோது விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்